தமிழ் புத்தாண்டுக்கு ஒடிடி-யில் வெளியாகிறதா யூத்..?
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில தனுஷின் இளைய மகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸின் மகனான இவர், அடுத்து வெற்றிமாறனின் விடுதலை 2, தனுஷின் வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது இவரே யூத் என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள யூத் படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘சிறை’ படம் மூலம் பாராட்டுகளை பெற்ற அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த மார்ச் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படம், தற்போது திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை ரூ..30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி வெளியான "யூத்", தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

