BGM-களை பதிவேற்ற youtube சேனல் தொடங்கிய இசைஞானி இளையராஜா
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுளில் ஒருவர் இளையராஜா. இவர் 'அன்னக்கிளி' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதுவரை 1000-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது இசையமைப்பில் வெளியான 'ஜமா' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
மேலும், சமீப காலமாக வெளியாகும் பல திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனிடையே இசைக் கச்சேரிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிலையில், தான் இசையமைத்த திரைப்படங்களில் இடம்பெற்ற பின்னணி இசைகளை பதிவேற்ற அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை தொடங்கியுள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். சேனலுக்கு 'இளையராஜா பிஜிஎம்'எஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பின்னணி இசைக்கான எனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது பாடல்கள் உங்களை ஆட்கொண்டதை போல, இந்த பின்னணி இசையும் உங்களின் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன். ஒவ்வொரு இசைக்குறிப்பும் ஒரு கதையை சொல்லும் இந்த இசைப் பயணத்தை ஒன்றாக தொடங்குவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.