"சர்வாதிகார அரசியல்வாதிகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது"... ’நந்தன்’ படத்தை பாராட்டிய அண்ணாமலை!

nandhan

சசிகுமார் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'நந்தன்' திரைப்படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'நந்தன்' திரைப்படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான திரைப்படம் 'நந்தன்'. கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சசிகுமாரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டைப் பெற்று வருகிறது. நந்தன் திரைப்படத்திற்கு திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நந்தன் திரைப்படத்தை பார்த்த அரசியல் கட்சி தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.



இந்நிலையில் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் நந்தன் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நந்தன் திரைப்படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.


தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர், சகோதரர், சசிகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளது படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story