“இது கொடூரம்” - ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செயலுக்கு வேதிகா காட்டம்

vedhika

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆடு ஒன்றை வெட்டி பலி கொடுத்தார்கள். ரசிகர்களின் இந்தச் செயலுக்கு நடிகை வேதிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 27-ம் தேதி வெளியான படம் ‘தேவரா’. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், உலகளவில் 172 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, ஆந்திராவில் ‘தேவரா’ படம் வெளியீட்டை முன்னிட்டு ஆடு ஒன்றை பலி கொடுத்து ஜூனியர் என்.டி.ஆர் போஸ்டரில் அதன் ரத்தத்தை தெளித்தார்கள். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.



 
இது தொடர்பாக நடிகை வேதிகா, “இது மிகவும் கொடூரமானது. இதை நிறுத்துங்கள். அந்தப் பாவப்பட்ட ஜீவனுக்காக எனது ரத்தம் சிந்துகிறது. இதற்கு யாரும் தகுதியானவர்கள் இல்லை. இது போன்ற சித்ரவதை யாருக்குமே நடக்கக்கூடாது. இது இறைவனின் காலடியில் தஞ்சம் அடையட்டும். ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிருங்கள். தயவு செய்து நிறுத்துங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

Share this story