‘பாராட்டைப் பெறுவது மகிழ்ச்சி’ … கமலுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!

kamalhasan

நேற்று முன்தினம் (அக்-31) தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயனின் எப்போதும் அல்லாத மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அனைவரிடமும் பாராட்டையும் பெற்று வருகிறது.

அதிலும், இந்த படத்தில் எந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு பலம் கொடுத்ததோ அதே அளவிற்கு இப்படத்தின் இசை முக்கிய பலமாக அமைந்துள்ளது. ராணுவ படத்தில் எந்த ஒரு மாஸ் பிஜிஎமும் இல்லாமல் நிகழ்விடத்தில் எப்படி ஒரு த்ரில்லான அனுபவம் நாம் பெறுவோமோ, அதை அப்படியே இசையாக அமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.42 கோடி அளவில் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை புகழ்ந்து பேசி இருப்பார்.


அதாவது அந்த அறிக்கையில் கமல், “தனது இசையினால் இந்தப் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் தனது முதல் படத்துக்குக் காட்டிய அக்கறையை, உழைப்பை ஒவ்வொரு படத்துக்கும் கடைபிடிக்கிறார்” என தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி கூறி ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இந்திய சினிமாவின் மாஸ்டரிடம் இருந்து இந்த பாராட்டை பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”, என ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டு இருந்தார். மேலும், இதற்கு அவரது ரசிகர்களும், ‘கமல் சொல்வது சரி தான் எனவும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதற்கு வராமல், படத்திற்கு இசை மட்டும் அமைக்கலாம்’ என்றும் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் கூறுவதற்கு ஏற்றவாறு தான் ஜி.வி.பிரகாஷும் சமீபத்திய படங்களுக்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story