"இது ஒன்றும் போட்டியல்ல.. தீ உடனான ஒப்பீடு தேவையில்லாத ஒன்று" - சின்மயி..!!

உலகநாயகன் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டூ விழா அண்மையில் நடந்தது. இந்த நிகழ்சியின்போது விழா மேடையில், படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடகர்கள் பாடினர். அப்படி சின்மயி பாடிய ‘முத்த மழை’ என்னும் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் திரைப்படத்தில் படத்தில் இந்தப்பாடலை பாடியவர் பாடகி தீ. தெங்கு மற்றும் ஹிந்தியில் மட்டுமே சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் தீ பாடிய பாடலுக்கு வரவேற்பு இருந்தாலும், சின்மயி பாடிய அளவிற்கு கொண்டாடப்படவில்லை. சின்மயி பாடிய வெர்ஷனையே படத்திலும் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஊடக நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சின்மயி, தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை தீதான் பாடியிருப்பார். ஆனால் அன்று அவர் ஊரில் இல்லை. ஆகையால் தான் நான் பாடினேன். எனக்கு கிடைத்த வரவேற்பை நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது.
அதேநேரம் என்னையும், பாடகி தீ-யையும் ஒப்பிடுவதே தேவையற்றது. தீ-யிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் மிகவும் சின்னப்பெண். இன்னும் 15 ஆண்டுகளில் அவர் 50 சின்மயி, 50 ஸ்ரேயா கோஷல்களை விழுங்கிவிட்டு, தனக்கென தனி இடத்தை உருவாக்குவார். அவர் குரலில் சில தனித்துவங்கள் உள்ளன. அதை யாராலும் செய்யவே முடியாது. தமிழில் முத்த மழை பாடலுக்கு அவரைப் பயன்படுத்தியதற்கு அப்பாடலுக்கு ஒரு வித்தியாசத்தை கொடுப்பதற்காகவும் இருக்கலாம்.
என்னுடைய 20 வயதில் முத்த மழையை இந்த அளவிற்கு பாடியிருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய நீண்ட கால அனுபவங்களும் காரணம். சின்மயி வெர்ஷன், தீ வெர்ஷன் என ஏதோ மல்யுத்தப் போட்டியில் சண்டை போடுவது போல் உள்ளது. இது ஒன்றும் போட்டியல்ல. கலைஞனாக நாங்கள் ஒவ்வொருவரின் வேலைகளையும் கண்டு வியக்கத்தான் செய்வோம்.” என்று கூறியுள்ளார்.