‘ஜெயிலர்’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. கவலையில் படக்குழுவினர் !
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையொட்டி இன்னும் சில நாட்களில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி மலையாள இயக்குனர் ஷக்கீர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஜெயிலர்’ என்ற தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஜூன் 26-ஆம் தேதி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பூஜை நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனும் கலந்துக் கொண்டார். அதனால் மலையாளத்தில் ‘ஜெயிலர்’ படத்தை வெளியிடும் போது தலைப்பை மாற்றி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இது ‘ஜெயிலர்’ படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.