மனைவியிடம் இருந்து உடைமைகளை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையத்தில் ஜெயம் ரவி புகார்?
மனைவி வீட்டில் உள்ள தன்னுடைய உடைமைகளை மீட்டு தரக்கோரி திரைப்பட நடிகர் ஜெயம் ரவி நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது, பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப் 9ம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார்.இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எனக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், தன்னுடைய ஒப்புதல் இல்லாமலும் வெளிப்படுத்திய செய்தி குறித்து பேச ஜெயம் ரவியை சந்திக்க முயன்றும் பார்க்க அனுமதிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, "ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல விரும்புகிறேன். வாழு வாழ விடு, யார் யார் பெயரோ எனது விவாகரத்து பிரச்னையில் சேர்த்து வைத்து பேசுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாக பார்க்க விடுங்கள் என்றும், என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க" என கூறியிருந்தார்.இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளர் மூலம் அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், சென்னை ஆர்த்தினுடைய வீட்டில் உள்ள தன்னுடைய உடைமைகளை மீட்டுத்தரக் கோரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த புகார் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.