கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி?
ஜெயம் ரவி - கார்த்திக் சுப்புராஜ் இணைந்து பணிபுரிய முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘ஜீனி’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஜெயம் ரவி.
இதன் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதற்குப் பிறகு நடிப்பதற்கு பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார் ஜெயம் ரவி. மேலும், சில இயக்குநர்களிடம் அவரே தொலைபேசி வாயிலாக கதைகள் ஏதேனும் இருக்கிறதா என்றும் கேட்டு வருகிறார்.இதனிடையே, சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் – ஜெயம் ரவி சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இந்தச் சந்திப்பில் தன்னிடம் உள்ள கதைகள் குறித்து ஜெயம் ரவியிடம் பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு சில கதைகள் பிடிக்கவே, அடுத்த சந்திப்பில் முழுக்கதையும் சொல்வதாக கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்தப் படத்தினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமே தயாரிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஜெயம் ரவி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. தற்போது ‘சூர்யா 44’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். அதற்குப் பிறகு ஜெயம் ரவி படத்தினை இயக்குவார் என தெரிகிறது.