பாலியல் புகாரில் ஜானி மாஸ்டர் - பவன் கல்யாண் உடனடி நடவடிக்கை
இந்திய திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தற்போது அதிகம் வெளிச்சத்திற்கு வருகிறது. இதற்கு முன்னோடியாக கேரளாவில் சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கையில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் நடிகைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பொது வெளியில் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கேரள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் எதிரொலியாக தமிழ் திரையுலகில் பாலியல் புகார்களை விசாரிக்க ரோகிணி தலைமையில் முன்பு உருவாக்கப்பட்ட விசாகா கமிட்டி தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கு திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட கோரி பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக இருக்கும் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 21 வயது இளம்பெண் ஒருவர், 2019ம் ஜானி மாஸ்டருடன் பணிபுரிந்த போது ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்பு சென்ற இடங்களில் எல்லாம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக தெலங்கானா போலீசார் ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து ஜனசேனா கட்சியில் பயணித்து வந்த ஜானி மாஸ்டர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனசேனா கட்சியிலிருந்து ஜானி மாஸ்டர் விலகி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது ராயதுர்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்காக ஜானி மாஸ்டர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். பவன் கல்யாண் தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.