பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்-ஜானி மாஸ்டர் மனைவி
பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்கிற ஷேக் ஜானி பாஷா. இவரிடம் துணை நடன இயக்குனராக வேலை செய்து வந்த பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாலியல் புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது சினிமா துறையை பார்த்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.
பின்னர் ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குனராக வேலை பார்த்து வந்தார். ஐதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியனில் உறுப்பினராக பணம் கட்டக் கூட முடியவில்லை. அவருக்கு எனது கணவர் ஜானி மாஸ்டர் பண உதவி செய்தார். அப்போது பெண் உதவி நடன இயக்குனர் தான் சிறந்த நடன அமைப்பாளராக ஆக வேண்டும் அல்லது சிறந்த கதாநாயகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் ஜானி மாஸ்டர் தன்னுடைய பட வாய்ப்புகளில் அந்த பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இப்போது அவர் மீது பாலியல் புகார் கூறுகிறார். மைனர் பெண்ணாக இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை யாராவது பார்த்தீர்களா? ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானால் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அப்படியானால் ஜானி மாஸ்டரிடம் வேலை செய்வது அதிர்ஷ்டம் என ஏன் கூறினார். பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.