‘லியோ’ கூட்டணியில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.

மாஸ்டருக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் 'லியோ'. சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் ஏற்கனவே 246 கோடி ரூபாய் பிரீ ரிலீஸ் வியாபாரம் செய்துள்ளது. 'லியோ'வில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் த்ரிஷா மீண்டும் இணைந்துள்ளனர். இருவருக்கும் இது 67வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் படத்தில் தேசிய விருது பெற்ற ஒருவர் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரை உலகின் விஜய் சேதுபதி என அழைக்கப்படும் ஜோஜு ஜார்ஜ், 'லியோ' கூட்டணியில் இணைந்துள்ளாராம். தற்போது நடந்து வரும் சென்னை படப்பிடிப்பில் அவர் பங்கு பெற்று வருகிறார் என்றும் தகவல்கல் தெரிவிக்கின்றன. நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்ட ஜார்ஜ் 2021-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ஆந்தாலஜி படத்திலும், ‘பபூன்’ படத்திலும் நடித்திருந்தார்.
கொடுக்கும் கதாப்பாத்திரமாகவே வாழும் ஜார்ஜ், பலரது பாராட்டுகளை பெற்று பல விருதுகளை வாரி குவித்துள்ளார். இந்த நிலையில் அவர் லியோவில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இவர் இணைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.