நெல்சன் உடன் இணைவதை சூசகமாக உறுதிப்படுத்திய ஜூனியர் என்டிஆர்...!

இயக்குனர் நெல்சன் உடன் இணைவதை நடிகர் ஜூனியர் என்டிஆர் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகமான நெல்சன், அதன் பின் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’, விஜய் நடித்த ’பீஸ்ட்’, ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ’ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில், அவருடைய அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது, தனது அடுத்த படத்தை வம்சி தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் இயக்குநர் பெயர் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். அவர் நெல்சனைதான் மறைமுகமாக குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த கூட்டணியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து "வார் 2" என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அதனை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர், அவர் நெல்சன் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.