ஜீனியர் என்.டி.ஆர் படம் வெளியீடு; நூதன கொண்டாட்டமும் தீ விபத்தும்!

devera

பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தேவரா’. சுதாகர் மிக்கிலினேனி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்திருக்க பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (27.09.2024) வெளியாகியுள்ளது. 
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தேவரா படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டதால் நேற்று மாலையில் இருந்தே ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் கூடி பட்டாசு வெடித்து அவரின் பேனருக்கு கிரேன் மூலம் பாலாபிஷேகம் செய்து கொண்டாடி வந்தனர். மேலும் ‘தேவரா’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பயன்படுத்தும் சில வித்தியாசமான ஆயுதங்களை உருவாக்கி திரையரங்கிற்குள் கொண்டு வந்து கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த நிலையில் ஆந்திராவிலுள்ள திரையரங்கம் ஒன்றில் ஜுனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் சிலர் ஆடு வெட்டி அதன் இரத்தத்தை ஜுனியர் என்.டி.ஆரின் பேனர் மீது தெளித்து கொண்டாடியுள்ளனர். மேலும் ஒரு திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போது பிரம்மாண்டமான பேனரில் தீப்பிடித்து எரிந்து பேனர் சாம்பலானது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story