"மதுரையில் மாடுபிடி பயிற்சி: வாடிவாசல் குறித்து கலைப்புலி எஸ்.தாணு தகவல்..!
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு 'வாடிவாசல்' படத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்து வருவது குறித்துப் பேசியிருக்கிறார். சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. 'விடுதலை -2' படத்தின் பணிகளோடு, 'வாடிவாசல்' படத்தின் திரைக்கதைப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
இந்நிலையில் திரைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு முறையாக சினிமா கற்றுக் கொடுக்க வெற்றிமாறன் தொடங்கியிருக்கும் 'பன்னாட்டுத் திரைப் பண்பாடு ஆய்வகத்தின்' (IIFC) 3-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழா முடிந்தபின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, 'வாடிவாசல்' படம் குறித்துப் பேசியிருக்கிறார்.
"கடந்த மாதம் 5ம் தேதி மாலையில் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு பற்றிப் பேசினோம். படத்துக்கான வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்காக மதுரையில் அலுவலகம் ஒன்றை அமைக்கவுள்ளோம். அங்கிருக்கும் மாடுபிடி வீரர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு மாடுபிடி பயிற்சிகள் அளித்து படப்பிடிப்பிற்கானப் பணிகளைத் தொடங்கவிருக்கிறோம்.இப்படத்தின் அறிவிப்பு வந்த சில நாள்களிலேயே ஒரு மூன்று நாள்கள் படப்பிடிப்பு எடுத்தோம். அப்போதே அதிலிருக்கும் ஆபத்துகளை உணர்ந்தோம். படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக அமெரிக்காவில் 'ஜூராஸிக் வேர்ல்டு' படத்தில் பணியாற்றிய கலைஞர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறோம். குறிப்பாக அந்தப் படத்தை எடுக்க உறுதுணையாக இருந்த ஜான் ரோல்டன் அவர்களிடமே இது குறித்துப் பேசிவருகிறோம்.
இப்படியான காரணங்களால்தான் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிக்கக் காலதாமதம் ஆகிறதே தவிர, வேறு எந்தக் காரணங்களுமில்லை. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளோம். நல்ல முறையில் திரைப்படம் உருவாகும். இதில் யாருடைய சம்பளமும் குறைக்கப்படவில்லை. இதுகுறித்து வரும் செய்திகளெல்லாம் வதந்திகள்தான்" என்று பேசியிருக்கிறார்.