கமல் சொன்ன கதையை தான் படமாக்குகிறேன் - இயக்குனர் எச்.வினோத்
கமல் சொன்ன கதையைதான் படமாக எடுக்கப்போகிறேன் என இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனராக இருப்பவர் எச் வினோத். கடைசியாக அஜித்தை வைத்து ‘துணிவு’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். கமலின் 233வது படமாக உருவாகும் அந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் ‘உடன்பிறப்பே‘ படத்தின் இயக்குனர் இரா, சரவணன் இல்ல விழாவில் இன்று கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல் சாருடன் இணைந்து படம் ஒன்றை பண்ண உள்ளேன். அது விவசாயம் தொடர்பான படம் இல்லை. கமல் சாரிடம் இரண்டு, மூன்று கதைகள் குறித்து விவாதித்தேன். ஆனால் கமல் சார் சொன்ன கதை நன்றாக இருந்தது. தற்போது அந்த கதைக்கு தான் திரைக்கதை எழுதி வருகிறேன்.
மேலும் பேசிய அவர், விவசாயத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. மறைந்த நெல் ஜெயராமன் குடும்பத்தினர் அறிமுகம் கிடைத்த பிறகு பாரம்பரிய நெல்லை மீட்டெடுக்க அவர் செய்த விஷயங்கள் எனக்கு தெரிய வந்ததது. இதையடுத்து நெல் ஜெயராமன் குடும்பத்தினரை கமல் சாரிடம் அழைத்து சென்று சில விஷயங்களை விவாதித்தோம்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் உண்மை கதைகள் அதிகமாக படமாக உருவாகியுள்ளது. ஆனால் நான் உண்மையாக போகிற கதைகளை படமாக எடுக்க உள்ளேன் என்று கூறினார்.