“வீரனுக்கு நிகரான வீராங்கனை வீட்டிலும் இருக்க வேண்டும்” - கமல்

kamal

கமல் தற்போது ஷங்கரின் இந்தியன் 3, மணிரத்னத்தின் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இரு படங்களும் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகளில் உள்ளது. இதனிடையே ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷ்னல் நிறுவனம் சார்பில் சிம்புவின் 48வது படம் மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய படத்தை தயாரிக்கிறார். 


இதில் அமரன் படம் வரும் தீபாவளிக்கு(அக்டோபர் 31) வெளியாகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.  

இந்த நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி மற்றும் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது படம் குறித்து கமல்ஹாசன் பேசுகையில்ம், “இந்தப் படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குருதிப்புனல், சத்யா ஆகிய படங்களின் வரிசையில் சொல்லி விட முடியாது. அந்த மூன்று படங்களும் புனைக் கதைகள். ஆனால் அமரன் அப்படி இல்லை.  


இந்தப் படம் நமக்காக நடந்த ஒரு நிஜம். இந்தக் கதையை ஏன் இப்படி போகிறது என கேட்க முடியாது. இதுதான் கதை. அதை தாங்கிக்க முடிந்தால் தாங்கிக் கொள்ளுங்கள். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை முதலில் கேட்டவர்கள் இந்துதான். வீரனுக்கு நிகரான வீராங்கனை வீட்டிலும் இருக்க வேண்டும். அதைப் பற்றியும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். அந்த நிஜம் எல்லா தாய்மார்களுக்கும் புரியும். எல்லா மனிதனுக்கும் புரியும். அதனால் இது வித்தியாசமான கதை. இந்தக் கதையை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. அதை நாங்கள் கண்டெடுத்து விட்டோம். இப்படத்தில் எங்களின் பங்கு கடமையை செய்துவிட்டோம் என்பதுதான்” என்றார்.

Share this story