‘தக் லைஃப்’ ஓடிடி ரிலீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்...!

kamal

‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் 'நாயகன்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம், 'தக் லைஃப்'. இதில் சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைப்பற்றியுள்ளது.thug life

இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது கமல் பேசியது: “தக் லைஃப் படம் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும். இது ஒரு பரிசோதனை கூட அல்ல. இது ஒரு நடைமுறை விஷயம். ஓடிடி தளம் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 
நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசினோம். அது வெறும் பேச்சுவார்த்தை அல்ல. அது ஒரு திட்டம். ஒருவேளை மற்றவர்களும் இதைப் பின்பற்றலாம். இது சினிமா துறையை ஆரோக்கியமாக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட முதல் நபர் நாங்கள்தான் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” இவ்வாறு கமல் தெரிவித்தார்.

மணிரத்னம் உடனான தனது நட்பு குறித்து பேசிய கமல், “மணிரத்னம் குறித்த முதல் அபிப்ராயம் என்னவென்றால், அவரை என் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பராகத்தான் எனக்குத் தெரியும். அவர் ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது கூட எனக்குத் தெரியாது. அவர் பேசும் விதம் எனக்குப் பிடித்திருந்தது. நாங்கள் நண்பர்களானோம். எங்களுக்குள் ஒரு நண்பர்கள் குழு இருந்தது. நாங்கள் சினிமாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம், எங்களுக்குள் கிசுகிசுக்கள் எதுவும் இருக்காது. அதுதான் தொடக்கம்” என்றார்.

Share this story