நானி குறித்து பேசிய கமல்ஹாசன்... ‘போதும் சார்’ என பதிவிட்டு நெகிழ்ந்த நானி..

nani

கமல் அளித்துள்ள பேட்டியில் தனது பெயரைக் குறிப்பிட்டதற்கு நானி நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். 


சமீபத்தில் நானி நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஹிட் 3’. இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அளித்த பேட்டியில், ‘விருமாண்டி’ படத்தின் நீதிமன்றக் காட்சியில் தூங்கி எழுந்தது போல் கமல் நடித்திருந்தது குறித்து சிலாகித்து பேசியிருந்தார் நானி. அதனை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் தன்னால் அது போல் நடிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.


தற்போது ‘தக் லைஃப்’ படத்தினை விளம்பரப்படுத்த கமல் பேட்டியளித்துள்ளார். அதில் ”மற்ற நடிகர்கள் உங்களுடைய குறிப்பிட்ட காட்சியைப் பின்பற்றி நடித்ததைக் குறித்து பேசும் போது எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்” என்ற கேள்வி கமலிடம் எழுப்பப்பட்டது. அதற்கு கமல் “நானி சமீபத்தில் சொல்லியிருந்தார். நானி பெயரை ஏன் குறிப்பிட்டேன் என்றால் சினிமா என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நானி என்று குறிப்பிட்டதே பெரியது. அது மாதிரி தான் நடிப்பும் இருக்க வேண்டும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்று பதிலளித்துள்ளார். கமல் தனது பெயரைக் குறிப்பிட்டு பேசியது குறித்து நானி, “போதும் சார். போதும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story