கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படப்பிடிப்பு நிறைவு? டிஜிட்டல் உரிமம் விற்பனையில் சாதனை!

thug life

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. (Thug life) இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ’நாயகன்’ கல்ட் கிளாசிக் திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் தக் லைஃப் படத்திலிருந்து விலகினர்.

இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’தக் லைஃப்’ திரைப்படம் டிஜிட்டல் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 149.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் உரிமையில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கோலிவுட் திரைப்படம் என்ற சாதனையை தக் லைஃப் திரைப்படம் தன்வசப்படுத்தியுள்ளது.

இதனிடையே, தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. படக்குழுவினர் ஒன்றாக எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தக் லைஃப் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this story