கமல் - மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் தேதி முடிவு

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இன்னும் சில காட்சிகள், ஒரு பாடல் தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இதன் ஓடிடி உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல் - மணிரத்னம் இருவரும் இணைந்து பணிபுரியும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். இதனை விநியோகஸ்தர்களிடம் கூறிவிட்டார்கள். விரைவில் இந்த தேதி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வரவுள்ளது. அந்த 5 நாட்கள் விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு ஏப்ரல் 10-ம் தேதியினை வெளியீட்டு தேதியாக தேர்வு செய்திருக்கிறது ‘தக் லைஃப்’ படக்குழு.