பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த உலக நாயகன் கமல்ஹாசன்...!

kamalhasan

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
பிக் பாஸ் தமிழை பொறுத்தவரை கமல் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். தொடர்ந்து 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். பலமுறை கமலின் முடிவுகளை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.  இந்த நிகழ்ச்சி மூலம் கமலுக்கு பெரியளவு வருமானம் கிடைத்தாலும்,  வார இறுதி நிகழ்ச்சிகளில் தனது அரசியல் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு மேடையாகவும் அவர் பயன்படுத்தி வந்தார். ஆனால், பிக் பாஸ் சீசன் 7-ல் கமலின் பல்வேறு முடிவுகள் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.உதாரணமாக பிரதீப் ஆண்டனியை பேச விடாமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது,  நிக்சனின் கொலை மிரட்டலை பெரிதுபடுத்தாமல் எச்சரிக்கையோடு நிறுத்தியது,  வினுஷா குறித்து நிக்சன் பேசிய சர்ச்சை கருத்தை ஆரம்பத்திலேயே கேட்காமல் விட்டது போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கமலுக்கு எதிராக இணையத்தில் பேசப்பட்டது.

Bigg boss
இந்த நிலையில் தான், சினிமாவில் கொடுக்கப்பட்டுள்ள கமிட்மெண்டுகளால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத சூழலில் இருப்பதால் அதில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்.."இதற்கு முன்னதாகவே நான் ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன். ஆகவே எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்." "இந்திய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மிகவும் அசத்தலான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் தமிழ். அதில் நான் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த நிகழ்ச்சியை எனக்கு தந்த விஜய் டிவி மற்றும் அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.


 

Share this story