கடைசிக்கட்ட படப்பிடிப்பில் ‘‘காந்தாரா: சாப்டர் 1 "திரைப்படம்
ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப்படம் வரவேற்பை பெற்றது. இதன் 100 வது நாள் விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, “இப்போது வெளியாகியிருப்பது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்து உருவாகும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது.‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக கர்நாடக மாநிலத்தின் குந்தாபுராவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் வெளிப்புற படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதற்கிடையே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த வருட மே மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.