கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு ?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக இந்திரா காந்தியின் படுகொலை, பஞ்சாப் கலவரங்கள் உள்ளிட்டவற்றை படத்தில் காட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார். சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் எமர்ஜென்சி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.