கங்குவா படத்தின் 2nd சிங்கிள் Yolo பாடல் வெளியானது!

kanguva

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சுர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கிளான Yolo என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் முதலில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக் 10ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், வேட்டையன் படத்தின் வெளியீட்டால் நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளிப் போனது. இந்நிலையில் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய அளவில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. வட இந்தியாவில் 3,500 திரையரங்குகளில் வெளியாகும் கங்குவா திரைப்படம், ஓடிடியில் 38 மொழிகளில் வெளியாகிறது. இதனிடையே இப்படத்தின் முதல் சிங்கிள் 'Fire song' கடந்த மாதம் வெளியாகி கலவையான வரவேற்பைப் பெற்றது.



இந்நிலையில் படக்குழு தற்போது ப்ரோமோஷனில் இறங்கியுள்ளது. கங்குவா படத்தில் சூர்யா பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழும் கங்குவா கதாபாத்திரத்திலும், தற்போதைய காலத்தில் வாழும் பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுகுறித்து ப்ரமோஷனில் பேசிய இயக்குநர் சிவா, கங்குவா திரைப்படம் டைட்டில் கார்டு தவிர்த்து 2 மணி 26 நிமிடம் எனவும், அதில் வரலாற்று கதை 2 மணி நேரம் எனவும், தற்போதைய காலத்தில் வரும் சூர்யாவின் ஃபிரான்சிஸ் கதாபாத்திரம் 26 நிமிடம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கிள் Yolo என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. பார்ட்டி சாங் போல உருவாகியுள்ள இப்பாடலில் பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் வரும் சூர்யாவும், திஷா பதானியும் தோன்றுகின்றனர். இந்த பாடலில் சூர்யாவின் தோற்றம் ஸ்டைலிஷாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் லவிதா லோபோ ஆகியோர் இணைந்து பாடி உள்ள இப்பாடலை பாடலாசியர் விவேகா எழுதி உள்ளார். தற்போது இப்பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Share this story