‘விஜய் 69’ படத்தில் நடிக்கிறாரா கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்..?

vijay 69

‘விஜய் 69’ படத்தில் நடிக்க கேட்டிருப்பதாக சிவராஜ்குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஜய் 69’. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் நடிப்பதற்கு தன்னிடம் பேசியிருப்பதாக சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். ’விஜய் 69’ குறித்து சிவராஜ்குமார் அளித்த பேட்டியொன்றில், “விஜய் படத்தில் நல்ல கதாபாத்திரம் ஒன்றுக்கு கேட்டிருக்கிறார்கள். எனது கால்ஷீட் தேதிகள் வைத்து அப்படத்தில் நான் இருக்கிறேனா என்பது தெரியும். விஜய்யும் அவருடைய கடைசி படம் என தெரிவித்திருக்கிறார்.


தனிப்பட்ட முறையில் அவருடைய கடைசி படம் என்று சொல்லக் கூடாது. அவர் ஒரு அற்புதமான நடிகர், நல்ல மனிதர். திரைத்துறை மற்றும் அரசியல் என இரண்டிலுமே சிறந்து விளங்குகிறார். அரசியலில் அவரது பார்வை அருமையாக இருக்கிறது. அதற்காக அவரை மதிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.இதன் மூலம் கால்ஷீட் தேதிகள் ஒத்து வந்தால் விஜய் படத்தில் சிவராஜ்குமார் நடிப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் ’விஜய் 69’ படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Share this story