அட்லீ உருவக் கேலி சர்ச்சை: கபில் ஷர்மா பதிவு !

atlee

இயக்குநர் அட்லீ பங்கேற்ற நேர்காணலில் அவரை உருவக் கேலி செய்ததாக எழுந்த சர்ச்சை குறித்து அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் ஷர்மா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

 இயக்குநர் அட்லீ பங்கேற்ற நேர்காணலில் உருவகேலி சர்ச்சை எழுந்தது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் கபில் ஷர்மா crew, ஃபிராங்கி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கபில் ஷர்மா The great indian kapil sharma show என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம்.

முன்னதாக ’பொன்னியில் செல்வன்’ படத்தின் புரமோஷனுக்காக கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’பேபி ஜான்’ திரைப்படம் வெளியாகிறது. பேபி ஜான் அட்லீ தமிழில் இயக்கிய ’தெறி’ திரைப்படத்தின் ரீமேக்காகும். இந்நிலையில் பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


அப்போது கபில் ஷர்மா அட்லீயிடம், "நீங்கள் ஒரு ஸ்டாரை சந்திக்கும் போது அவர்கள் அட்லீ எங்கே என கேட்டதுண்டா?" என கேள்வி எழுப்பினார். இதற்கு இயக்குநர் அட்லீ, "நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது, நான் முதலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் தான் எனது முதல் படத்தை தயாரித்தார். அவருக்கு நல்ல கதையில் தான் எதிர்பார்ப்பு இருந்தது. எனது உருவம் குறித்து அவர் பொருட்படுத்தவில்லை. அவருக்கு நான் கதை கூறிய விதம் பிடித்திருந்தது. அவ்வாறு தான் ஒருவரை அணுக வேண்டும். ஒருவரது தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது. ஒருவரது உள்ளத்தை வைத்து திறமையை அறிய முடியும்" என கூறியுள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் கபில் ஷர்மா கேட்ட கேள்வி அட்லீயை உருவக் கேலி செய்வது போல் உள்ளதாக சமூக வலைதளத்தில் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து கபில் ஷர்மா நிகழ்ச்சியின் வீடியோவை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “நான் இந்த வீடியோவில் அவரது தோற்றம் குறித்து எங்கு பேசியுள்ளேன் என சொல்லுங்கள். சமூக வலைதளத்தில் வெறுப்பை பரப்ப வேண்டாம்.

நீங்களே இந்த வீடியோவை பார்த்து நான் கேள்வி எழுப்பியது குறித்து முடிவு செய்து கொள்ளுங்கள். ஆட்டு மந்தை போல ஒருவரது ட்வீட்டை பின் தொடர வேண்டாம்” என கூறியுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share this story