நடிகர் கார்த்தி கிராமத்து நாயகனாக கலக்கும் ’மெய்யழகன்’ பாடல்கள் நாளை வெளியீடு!

karthi

கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள 'மெய்யழகன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நாளை இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி, தனது வித்தியாசமான கதைத் தேர்வு மூலம் பெயர் பெற்றவர். தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 96 படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குநர் பிரேம்குமார் இயக்கியுள்ள திரைப்படம் 'மெய்யழகன்'.இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 'மெய்யழகன்' படத்தை நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் (2D entertainment) நிறுவனம் தயாரித்துள்ளது. கிராமத்து கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை போலவே இதுவும் மண்மனம் மாறாத படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அரவிந்த் சாமி மற்றும் கார்த்தி இருவரின் தோற்றங்கள் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



முன்னதாக, மெய்யழகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நாளை (ஆகஸ்ட் 31) மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

கார்த்தியின் 'விருமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்ற நிலையில், தற்போது 'மெய்யழகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெறுகிறது. கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெற உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கிய திரைப் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

Share this story