‘ஹனுமன்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?

karthi

‘ஹனுமன்’ பட இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஹனுமன்’. தேஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்கள் முன்வந்தார்கள்.ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படத்தினை இயக்க இருந்தார் பிரசாந்த் வர்மா. ஆனால், கருத்து வேறுபாட்டால் விலகிவிட்டார். தற்போது பாலையாவின் மகன் நாயகனாக அறிமுகமாகும் படத்தினை இயக்கவுள்ளார். இதற்கிடையே கார்த்தியை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் பிரசாந்த் வர்மா.

இதனை ‘சத்யம் சுந்தரம்’ (மெய்யழகன் - தெலுங்கு வெளியீடு) நிகழ்ச்சியில் பிரசாந்த் வர்மா கலந்து கொண்டு பேசும்போது உறுதிப்படுத்தினார். அந்த விழாவில் கார்த்தி, பிரசாந்த் வர்மாவின் கதை அற்புதமாக இருந்ததாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார். இதன் மூலம் பிரசாந்த் வர்மா - கார்த்தி இருவரும் ஒரு புதிய படத்தில் இணைவது உறுதியாகிறது.இருப்பினும், இந்தக் கூட்டணி இணையும் படத்தின் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்கள் எதுவுமே முடிவாகவில்லை என தெரிகிறது. பாலையா மகன் நடிக்கும் படத்தினை முடித்துவிட்டு, கார்த்தி நடிக்கும் படத்தினை இயக்குவார் பிரசாந்த் வர்மா எனக் கூறப்படுகிறது.

Share this story