கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் திரைக்கதையில் மாற்றம்...?

கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'சூது கவ்வும்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நலன் குமாரசாமி. அதற்கு பிறகு அவர் இயக்கிய 'காதலும் கடந்து போகும்' படம் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கும் படம் 'வா வாத்தியார்'. கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த்ராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. கார்த்தியும் ஜோர்டான் நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டார். இந்த நிலையில் படத்தை முழுவதுமாக பார்த்த தயாரிப்பாளருக்கு அதில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் தோன்றியிருக்கிறது. அதேப்போல சினிமாவில் உள்ள வேறு சில முக்கியமானவர்களுக்கும் படத்தை போட்டு காட்டியிருக்கிறார்கள். அவர்களும் அதே கருத்தை கூறியிருக்கிறார்கள்.இதனால் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து மேலும் சில காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக கார்த்தி மேலும் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஜோர்டானில் இருந்து திரும்பி வந்ததும் மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.