கார்த்தியின் ‘வா வாத்தியார்’ அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டம்!

karthi

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீட்டு திட்டம் என்ன என்பது தெரியவந்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். நீண்ட வருடங்களாக இந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது. ’வா வாத்தியார்’ படத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட ‘மெய்யழகன்’ படமே வெளியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் திரையுலக வாழ்வில் அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’ எனக் கூறப்படுகிறது.தற்போது இந்தப் படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற் போல் இறுதிப்பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். விரைவில் படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக ‘கங்குவா’ படத்துடன் ‘வா வாத்தியார்’ டீஸரை இணைக்கலாமா என்ற பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது.

Share this story