கவுண்டம் பாளையம் படம் ரிலீஸ்.. போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள படம் கவுண்டம்பாளையம். படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படம் குறித்த சலசலப்பு நிலவி வந்தது. இந்நிலையில் படம் கடந்த ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்று மிரட்டுவதாகக் கூறி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கவுண்டம் பாளையம் படக்குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். கவுண்டம் பாளையம் படத்தினை ரிலீஸ் செய்யும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.திரையிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பாளர் பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தயாரிப்பாளர் பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவில், தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் கவுண்டம் பாளையம் படத்தை திரையிட முடிவு செய்திருந்த நிலையில் குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால் படத்தினை வெளியிடுவதாக இருந்த முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளனர். கவுண்டம் பாளையம் படம் எந்த சாதி மத மொழிக்கு எதிராகவும் எடுக்கப்படவில்லை. உரிய முறையில் தணிக்கை சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கவுண்டம் பாளையம் படத் தயாரிப்பாளர் தொடுத்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுண்டம் பாளையம் படத்தை திரையிட இருந்ததாக கூறப்படும் எந்த திரையரங்கு உரிமையாளர்களும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை எனவும் மனுதாரரும் தனது மனுவில் எந்த திரையரங்கத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது எனவும் குறிப்பிடவில்லை. மேலும் 150 திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது முடியாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கவுண்டம் பாளையம் படத்தை திரையிடும் திரையரங்குகளில் எந்த திரையரங்குகள் பாதுகாப்பு தேவை எனக் கருதும் திரையரங்க உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு அளித்தால் அந்த திரையரங்குக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே, படத்தின் நடிகரும் இயக்குநருமான ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசுகையில், கவுண்டம் பாளையம் பட வெளியீட்டில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் செய்தித் துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளேன். கவுண்டம் பாளையம் படத்தை வெளியிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி, படத்தை திரையிட விடாமல் தடுக்கும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். கவுண்டம் பாளையம் படத்தில் நாடகக் காதல் குறித்தும், பெற்றோரின் வலியையும் படமாக்கி உள்ளேன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது. யார் எதிர்க்கிறார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை. ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று ஒரு சினிமாகாரனாக எனக்குத் தெரியும். கவுண்டம் பாளையம் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் சாதாரண விவசாயிகள்தான். இந்தப் படத்தின் வெற்றிதான், என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதிலாக இருக்கும். யார் எதிர்க்கிறார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.