"இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி"-டோரதி படம் பற்றி கீர்த்தி சுரேஷ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம், ‘டோரதி’. பரவலான பாராட்டுகளை பெற்றுள்ள இப்படத்தில் நடித்தது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘என் இதயத்தின் ஒரு பகுதியை ‘டோரதி’ எடுத்துக்கொண்டு விட்டாள். உங்கள் மனதின் ஒரு பகுதியில் நான் இடம்பிடித்து இருக்கிறேன் என்று நம்புகிறேன். டோரதியுடன் என்மீது நம்பிக்கை வைத்து, உங்கள் மனதிற்கு நெருக்கமான உங்களின் தொலைநோக்கு பார்வையில் என்னையும் ஒரு அங்கமாக்கியதற்காக, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி. அவரது கனவு படம் ஒன்றில் நானும் இடம்பெற்று இருப்பதை என் கனவு போலவே உணர்கிறேன். இளையராஜா சார் உருவாக்கிய மாயாஜால உலகிற்குள் நானும் ஒரு அங்கமாக இருப்பேன் என்று, ஒருநாள் கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. இதை என் வாழ்நாள் பொக்கிஷமாக போற்றுவேன்.
ஒளிப்பதிவாளர் திரு சார், நீங்கள் என் குரு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்றை சொல்கிறேன். உங்கள் பணிகளை எப்போதுமே நான் போற்றி வந்திருக்கிறேன். இம்முறை மீண்டும் அதன்மீது நான் காதல் வயப்பட்டுவிட்டேன். நான் பெருமைப்படும் ஒரு பயணத்தில் என்னையும் ஒரு சிறு பகுதியாக பங்களிக்க செய்த இப்படத்தின் தயாரிப்பாளர்கள் உள்பட படக்குழுவினர் மற்றும் இதர கலைஞர்களுக்கு எனது நன்றி. இப்படத்தின் உருவாக்கத்தில் இணைந்து பயணித்த அனைவரும் சிறு முத்திரையை பதித்துள்ளனர். என்மீது பெரிய முத்திரையை பதித்துள்ளனர். இறுதியாக, இப்படத்தின் மீது அன்பையும், ஆதரவையும் பொழிந்து வரும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி’ என்று, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

