திருமண கொண்டாட்டம்.. காதலருடன் கோவாவிற்கு புறப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

பிரபல திரைபட நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை மேற்கொள்ள அவர் காதலர் ஆண்டனி மற்றும் நண்பர்களுடன் கோவா புறப்பட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இந்தியில் பேபி ஜான் படத்தில் கதாநாயகியாகவும் தமிழில் கண்ணி வெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். இதில் பேபி ஜான், வருகிற 25ஆம் தேதி கிறுஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் கடந்த வாரம் தனது காதலை உறுதிசெய்திருந்தார். ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, “15 வருடக் காதல் இப்போதும் தொடர்கிறது. எப்போதும் தொடரும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அவர், கோவாவில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் சொல்லியிருந்தார். அதைத்தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக அவர்களது திருமண பத்திரிக்கை வெளியானது. ஆனால் திருமணம் நடக்கும் இடம் குறித்து எந்த விவரமும் அதில் குறிப்பிடவில்லை. இந்த நிலையில், திருமண பணிகளை மேற்கொள்ள, கீர்த்தி சுரேஷ் காதலர் ஆண்டனி மற்றும் நண்பர்களுடன் கோவா புறப்பட்டுள்ளார்.