திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த விஜய் : புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

keerthi

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  

நடிகர் விஜய் கடைசியாக வெங்கட பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி தற்காலிகமாக தளபதி 69 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலை பெற்றோர் சம்பந்தத்துடன் இந்து முறைப்படியும் கிறித்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வந்தது. அதே சமயம் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் ஜோடியுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.



இது தொடர்பான புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, “எங்களுடைய கனவு திருமணத்தில் எங்களுடைய கனவு சின்னம் விஜய் சார் எங்களை ஆசீர்வதித்தபோது” என்று குறிப்பிட்டு “அன்புடன் உங்கள் நம்பி மற்றும் நண்பா” என்று விஜய் ஸ்டைலில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story