தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்த 'கிங்டம்' பட நிறுவனம்

ச்

கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக அறிந்தோம், படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது என உறுதியளிக்கிறோம் என பட தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் கூறியுள்ளது.

தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்த 'கிங்டம்' பட நிறுவனம்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஜூலை 31 ம் தேதி வெளியானது.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த திரைப்படத்தில் ஈழ தமிழர்களை கொச்சைபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் படத்தை திரையிட கூடாது என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தனது எக்ஸ் தளத்தில், “M/s. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கிங்டம்'. இப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப் பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். 'கிங்டம்' திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!” எனக் குறிப்பிட்டுள்ளது.

Share this story