கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கையை கூறும் ‘தேவராயா’ -யார் ஹீரோ தெரியுமா ?

kitcha sudeep

கன்னட படவுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக ‘நான் ஈ’ படத்தில் அவரது நடிப்பு பல தரப்பினரால் பாராட்டப்பட்டது. இவரது நடிப்பில் வெளியான ‘மேக்ஸ்’, ‘மார்க்’ ஆகிய படங்கள் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் ‘ஸ்கூல் பஸ் வாய்சஸ்’, ‘பில்லா ரங்கா பாஷா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கிச்சா சுதீப் அடுத்ததாக விஜயநகர பேரரசின் மிகப்பெரிய மன்னனான  கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் ‘தேவராயா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதில் மன்னர் கிருஷ்ண தேவராயர் வேடத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறார். பீப்புள் மீடியா பேக்டரி, சுப்ரியான்வி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த 2ம் தேதி கிச்சா சுதீப்பின் பிறந்தநாளையொட்டி ‘தேவராயா’ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் ‘வரலாற்றை செதுக்கிய ஒரு பேரரசு. ஒரு சகாப்தத்தை வரையறுத்த ஒரு மாமன்னன். காலத்தைக் கடந்து வாழும் ஒரு ஜாம்பவான்’ என்ற வரிகளுடன் பாரம்பரிய அரச உடையில், நவரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட கிரீடத்துடன் கிச்சா சுதீப் கம்பீரமாக தோற்றம் கொண்டுள்ளார். கவுரா ஹரி கே இசை அமைக்கும் இப்படத்தின் இயக்குனர், இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு வெளியிடவில்லை. படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story