நள்ளிரவில் நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் மர்ம நபர்கள்.. போலீசார் விசாரணை

sona

மதுரவாயலில் உள்ள நடிகை சோனா வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா. இவர் ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலிவுட் படங்களில் குத்தாட்ட பாடல்களால் புகழ் பெற்றவர். இவர் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து, வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது, சோனா வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குரைக்கவே, சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். அவரைப் பார்த்ததும் இரண்டு மர்ம நபர்களும் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், சோனா கூச்சலிட்டுள்ளார்.

இதனால் அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி சோனாவை மிரட்டி உள்ளனர். அப்போது சோனா தப்பிச் செல்ல முயன்று கீழே விழுந்ததில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, சோனா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this story