தமிழ் சினிமாவில் AI தொழில்நுட்பத்தில் தயாரான முதல் திரைப்படம் ‘வெப்பன்’.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. இது தொடர்பான செய்திகளையும் நாம் அதிகம் கேட்டு வருகிறோம். இந்த நிலையில் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்பட்ட AI தொழில் நுட்பம் முதல் முறையாக கோலிவுட்டில் ‘வெப்பன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக உள்ளது.
மில்லியன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடித்துள்ளனர். விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பன் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் இரண்டு நிமிடத்திற்கு செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில் “இந்த AI தொழில்நுட்பத்தை திட்டமிட்டே பயன்படுத்தவில்லை, இது படைப்பாளிகளை அழித்துவிடும் என எனக்கு தெரியும், படத்தை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் பயன்படுத்தியுள்ளோம்.’ என கூறியுள்ளார். சத்தியராஜ், வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள இந்த இந்த படத்தில் பிரபல ஒளிபதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் வில்லனாகவும், தான்யா ஹோப், மாயா, மைம் கோபி, யாஷிகா ஆனந்த், கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.