கொட்டுக்காளி படத்திற்கு இசை அமைப்பாளர் இல்லை: இயக்குநர் தகவல்
‘கூழாங்கல்’ படத்தை அடுத்து பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள படம், ‘கொட்டுக்காளி’. சூரி, மலையாள நடிகை அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்தியேன் தயாரித்துள்ள இந்தப் படம் ஆக.23-ம் தேதி வெளியாகிறது.பற்றி பி.வினோத்ராஜ் கூறியதாவது: நான் இயக்கிய ‘கூழாங்கல்’ இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை. அந்த நம்பிக்கையில் இதை இயக்கி இருக்கிறேன். ‘கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் புழங்கும் மண் சார்ந்த ஒரு வார்த்தை. அதற்கு, பிடிவாதத்துடன் இருப்பது, தனக்கு விருப்பப்பட்டதை வெளிப்படையாகச் சொல்வது என்று அர்த்தம். இந்தக் கதைக்கு அது பொருத்தமாக இருந்தது. இதில் சேவலும் ஒரு கதாபாத்திரமாகப் படத்தில் வரும்.
பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். நம் வாழ்வியலுக்கு மிகவும் நெருக்கமான படமாக இது இருக்கும். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்ட் வைத்தே எடுத்திருக்கிறோம். இது ஒரு பயணத்தின் கதை. அந்தப் பயணத்தின் வழியாக மனிதர்களைப் புரிந்துகொள்ளும் விதமாக இந்தப் படம் இருக்கும். பட விழாக்களில் வெளியாகும் உலகப் படங்களை பார்த்துதான் என் சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். நம் வாழ்க்கையையும் உலக பட விழாக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தையும் அப்படித்தான் உருவாக்கி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.