கொட்டுக்காளி படத்திற்கு கமல் பாராட்டு : இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் நெகிழ்ச்சி

kamal

'கொட்டுக்காளி' திரைப்படத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய கமலின் கடிதம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். கமலும் படக்குழுவினரைப் பாராட்டிப் பேசியிருக்கும் காணொலி வைரலாகி வருகிறது. நாளை (ஆகஸ்ட் 23ம் தேதி) திரைக்காணும் `கொட்டுக்காளி', `வாழை' இரண்டு திரைப்படத்திற்கும் திரை வட்டாராத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த இரண்டு படங்களைப் பார்த்த எல்லோரும் தங்கள் சமூகவலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர். அவ்வகையில் 'கூழாங்கல்' திரைப்படத்தை எடுத்து சர்வதேச அளவில் விருதுகள் பெற்ற பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கொட்டுக்காளி' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டியிருக்கிறார். மேலும், 'கொட்டுக்காளி' படத்தின் சிறப்புகளை, தான் கண்டு அனுபவித்ததை கடிதமாக எழுதியும் பாராட்டியிருந்தார் கமல்.



இந்நிலையில் இதுகுறித்து படக்குழுவினரிடம் கமல் பேசும் காணொலி சமூகவலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், "உங்களின் இந்தக் கடிதம், பாராட்டுகள் மெய்சிலர்க்க வைக்கிறது சார். இப்படி என் படத்தை உற்றுக் கவனித்துப் பாராட்டிவிடமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன். என் படங்களில் இருக்கும் சிறுசிறு விஷயங்களைப் புரிந்துகொண்டு அதைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது அது உங்கள் மூலம் நடந்திருக்கிறது சார்" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.


கமல்ஹாசன், "சினிமா என்பது தனிமொழி. அது இயல்பாகவே உங்களுக்கு வருகிறது. அதை என்னைக்கும் நிறுத்திவிடாதீர்கள். வினோத்தின் இந்த திறமையை அடையாளம் கண்டு அதை தயாரித்து, நடித்து உடன் இருந்த அனைவருக்கும் தனி பாராட்டுகள்.



இப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இப்படத்தில் சில முடிவுகளெல்லாம் எப்படித் துணிச்சலாக எடுத்தீர்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. குறிப்பாக, இசை வேண்டாம் என்று முடிவெடுத்தது இப்படத்திற்கு மிகச் சரியான முடிவு. அப்படிப்பட்ட துணிச்சலான முடிவெடுத்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகள்" என்று 'கொட்டுக்காளி' குறித்தும், இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் குறித்தும் சிலாகித்துப் பேசியிருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story