கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் 'கூகுள் குட்டப்பா'... படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ திரைப்படம் தற்போது தமிழில் 'கூகுள் குட்டப்பா' என்ற பெயரில் உருவாகியுள்ளது. தமிழில் சில மாற்றங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

இப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வரும் மே 6-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

