‘குடும்பஸ்தன்’ படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

இசையமைப்பாளர் அனிருத் குடும்பஸ்தன் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் மணிகண்டன். இவர் ஆரம்பத்தில் காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதேசமயம் இவர், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். இந்த படம் மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தர அடுத்த அடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே ஹீரோவாக நடித்திருந்த குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து குடும்பஸ்தன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் மணிகண்டன். இந்த படத்தினை ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.
சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வைஷாக் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சுஜித் என் சுப்ரமணியம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து குரு சோமசுந்தரம், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே ஜீரோ பேலன்ஸ் ஹீரோ எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நாளை (ஜனவரி 15) இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாகவும் இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.