கும்பமேளா பெண்ணுக்கு வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது..

மகா கும்பமேளாவின் போது வைர மாலை விற்ற பெண் மோனாலிசாவுக்கு , திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தனக்கு சினிமா வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, பல ஹோட்டல்களுக்கு வரவழைத்ததாகவும், அங்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், பலமுறை பாலியல் கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதன் காரணமாக பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும், தனக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் போது வாதாடிய வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் மீது கூறப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும், புகார் அளித்த பெண்ணே முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும், நீதிமன்றம் இதனை ஏற்காமல், முன் ஜாமின் அளிக்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இவர்மீது ஏற்கனவே சில பெண்கள் புகார் கூறியுள்ளதாகவும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் மோனலிசாவை வைத்து எடுக்கும் படம் டிராப் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.