ஆஸ்கர் விருதை தவறவிட்ட 'லபாடா லேடீஸ்' திரைப்படம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இருந்து ’லபாடா லேடீஸ்’ திரைப்படம் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘லபாடா லேடீஸ்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டது. Academy of motion picture arts and sciences சமீபத்தில் ஆஸ்கர் விருதுகளுக்காக 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் இருந்து தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட லபாடா லேடீஸ் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சிறந்த குறும்படம் பிரிவில் இருந்து அனுஜா (Anuja) என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது.
கிரண் ராவ் இயக்கிய ’லபாடா லேடீஸ்’ திரைப்படம் 97வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது. இரண்டு திருமணமான பெண்கள் ரயிலில் நடக்கும் குழப்பங்களால் தங்கள் செல்ல வேண்டிய இடம் மாறி வேறு கிராமத்திற்கு செல்கின்றனர். பின்பு அதனால் ஏற்படும் விளைவுகளே லபாடா லேடீஸ் படத்தின் கதை. இந்த படத்தில் நிதான்ஷி கோயல், பிரதீபா ரண்டா, ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நடிகர் அமீர் கான் தயாரித்த லபாடா லேடீஸ் திரைப்படம் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியானது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட லபாடா லேடீஸ் திரைப்படம், ஆஸ்கர் விருதுகளில் அடுத்த பிரிவிற்கு தேர்வாகாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில் பிரேசில், கனடா, ஃபிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 85 நாடுகளில் இருந்து திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை தொழிலாளர்களின் அவலநிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள 'அனுஜா' குறும்படம் அடுத்த வருடம் ஆஸ்கர் விருதுகளில் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. சிறந்த குறும்படத்திற்கான பிரிவில் 180 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுஜா குறும்படத்தை இயக்கிய இயக்குநர் குனித் மோங்கா கபூர் முன்னதாக இர்ஃபான் கான் நடித்த ’Lunchbox’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
97வது அகாடமி விருதுகளுக்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வரும் ஜனவரி மாதம் தொடங்கும். பின்னர் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி மாதம் 17ஆம் தேதி அறிவிக்கப்படும்.