பழம்பெரும் எடிட்டர் ஆர்.விட்டல் காலமானார்... திரையுலகினர் இரங்கல் !

vittal

பழம்பெரும் படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

தமிழ் சினிமாவில் 80-களில் மிகவும் பிரபலமான படத்தொகுப்பாளராக இருந்தவர் ஆர்.விட்டல். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக இருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 

தமிழில் ஆடு புலி ஆட்டம், ஜப்பானில் கல்யாணராமன், படிக்காதவன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, விக்ரம், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக ரஜினியின் பல படங்களுக்கு இவர் படத்தொகுப்பாளர். சினிமாவில் படத்தொகுப்பாளராக அறிமுகமான அவர், பின்னாளில் இயக்குனராகி சில படங்களை இயக்கியுள்ளார். 

91 வயதாகும் ஆர்.விட்டல் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கேன்சர் நோய் தீவிரம் அடைந்ததால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

Share this story