ரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படாது,... அறிவிப்பு பலகையால் ரசிகர்கள் அதிர்ச்சி...
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் லியோ திரைப்படம் வெளியாகாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. படத்திற்காக 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு மட்டும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வெளியீட்டுக்கு முன்பே சர்வதேச அளவில் படம் சாதனை படைத்து வந்தாலும், சென்னையில் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்காமலேயே உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தரப்புக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே சரியான முடிவு எட்டப்படாததால் இந்த நிலை நீடிப்பதாக தெரிகிறது.
இதனிடையே, ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.