வீர தீர சூரன் படம் மூலம் ’தூள்’ விக்ரமை மீண்டும் பார்க்கலாம்.. : எஸ்.ஜே. சூர்யா

வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் - சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் `வீர தீர சூரன்' . ஜி.வி பிரகாஷ் இசையில் ஹெச் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகி உள்ளது. மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மார்ச் 27 ம் தேதி வெளியாகவுள்ளது. வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அருண்குமார், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இயக்குனர் அருண்குமார், நான் மதுரை சிந்தாமணி தியேட்டரில் 'தூள்' படத்தை பார்த்தேன். போலீஸ்கிட்ட அடி வாங்கிட்டுப் போய் அந்தப் படம் பார்த்தேன். இன்னைக்கு அந்த நடிகரை வச்சு திரைப்படத்தை இயக்கியிருக்கேன். அவருக்கு இது 62வது படம். ஆனால், இன்னைக்கும் என்னபா பண்ணனும்னு கேட்பாரு. இந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் பிரஷர். ஏன்னா, அந்த வார்த்தைக்கு நான் முதல்ல தயாராகி இருக்கணும். நான் ஏற்கனவே விக்ரம் சார்கூட வேலை பார்க்க வேண்டியது. அது அப்போ நடக்கல. இன்னைக்கு நடந்திருக்கு.இன்னைக்கு தொகுப்பாளினி கி.கி இருக்காங்க.
அந்த நாளைய இயக்குனர் போன்ற விஷயங்களெல்லாம் நினைவுக்கு வருது. அதே சிந்தாமணி தியேட்டர்ல நியூ படம் பார்த்திருக்கேன். இன்னைக்கு எஸ்.ஜே. சூர்யா வச்சு டைரெக்ட் பண்ணியிருக்கேன். விக்ரம் சார்கூட தொடர்ந்து வேலை பார்க்கணும். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கலாம். இந்தப் படம் இரண்டாவது பாகம். அதுனால கொஞ்சம் சீக்கிரமாக தியேட்டருக்கு வாங்க. இந்த பாகம் 2 ஐடியா பெருமை கிடையாது. இதுக்கான ஐடியா கொடுத்ததும் விக்ரம் சார்தான். நான் நிறைய டைட்டில் சொன்னேன். அப்புறம் அவர் வீட்டில ஒரு நாள் சாப்பிட்டுட்டு இந்த தலைப்பு சொன்னேன். 'சூப்பராக இருக்கு இது பாகம் 2'னு வச்சிடலாம்னு அவர்தான் ஐடியா கொடுத்தாரு. விதை அவர் போட்டதுதான்" என்று கூறினார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,“இது ஒரு வித்தியாசமான படம். பொழுதுபோக்கு என்பது பல வகையில் இருக்கும். ஜாலியாக சிரிக்க வைப்பது ஒரு பொழுதுபோக்கு, அந்த வகையான படத்திற்கும் பெரும் வரவேற்பு இருக்கும். 'பிதாமகன்', 'சேது' போன்ற படங்களுக்கும் பெரும் வரவேற்பு இருக்கும்.
ஜீ. வி. பிரகாஷ் சொன்னது போல் 'அசுரன்' போன்ற படத்திற்கும் வரவேற்பு இருக்கும். இந்தப் படம் இயக்குநர் அருண்குமாரின் படம். அருண்குமார் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கர்ஸெஸியின் ரசிகர். ஒரு ஆங்கில படத்தின் தரத்தில் தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்தில் நடிக்கும் போது மிகவும் ரசித்து வேலை செய்தேன்.
என்னுடைய வழக்கமான நடிப்பை தூக்கிப் போட்டு புதுவிதமான நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படத்தில் நீங்கள் புது எஸ் ஜே சூர்யாவை பார்ப்பீர்கள். 'இறைவி'யில் ஆரம்பித்த அந்தப் பயணம். இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறது. குணச்சித்திர நடிகர் என்பது ஒரு ரூட். நான் எப்போதும் வில்லன், ஹீரோ இரண்டில் ஒன்றில் தான் நடிக்க வேண்டும் என விரும்புவேன். ஒன்று கதையின் நாயகன், இல்லையென்றால் எதிர் நாயகன். நாயகனாக இருப்பது முக்கியம்.
சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. அவர் தமிழ் சினிமாவின் கௌரவம். இந்த படத்தில் பழைய ’தூள்’ படத்தில் இருந்த விக்ரமை ரசிகர்கள் பார்ப்பார்கள். அந்தளவிற்கான மாஸ் கதாபாத்திரத்தை இயக்குநர் வேறு மாதிரி கொடுத்திருக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களைத் தாண்டி விக்ரம் விக்ரமாக நிறைய படங்கள் கமர்ஷியலாக நடிக்க வேண்டும். என கூறினார்.