அமரன் படம் போல் நானும் பாதிக்கப்பட்டேன்.. இயக்குனர் வசந்த பாலன் பகிர்வு

vasantha balan

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான அமரன் படத்தில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ப்ரொபோஸ் செய்து விட்டு தனது செல்ஃபோன் நம்பரை ஒரு துண்டு சீட்டில் எழுதி அவரிடம் கசக்கி தூக்கி வீசுவார். அந்த நம்பரை பார்த்த பலரும், சாய் பல்லவி நம்பர் என நினைத்து அவருக்கு வாழ்த்து கூற போன் செய்துள்ளனர். ஆனால் அந்த நம்பர் சென்னையை சேர்ந்த வாகீசன் என்ற மாணவர் பயன்படுத்தி வந்ததால், தொடர் அழைப்பின் காரணமாக தூக்கம் இல்லாமல் மனஉளைச்சளுக்கு ஆளாகியுள்ளார். பின்பு இந்த சம்ப்வத்தால் படக்குழுவினரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம், நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இந்த சம்பவம் பரவலாக பேசப்பட்ட நிலையில் அதை குறிப்பிட்டு அதே போல் தனக்கும் ஒரு சம்பவம் நடந்ததாக வசந்த பாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாவது, “இயக்குநர் லிங்குசாமியால் எனக்கு அப்படியொரு சோதனை ஏற்பட்டது. சண்டக்கோழி திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக்காட்சியும் முதல் நாள் முதல் காட்சியும் பார்த்த நண்பர்கள் ‘சண்டக்கோழி திரைப்படம் பத்து ரன்’ என்று பாராட்டி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர். நான் லிங்குவிற்கு படம் பார்த்த நண்பர்கள் இப்படி பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார்கள், மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று லிங்குவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிலிட்டான்.vasantha balan

அச்சமயத்தில் நான் மதுரையில் வெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அன்று பரத், பாவனா சம்மந்தமான காட்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஜனநெருக்கடியான பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வேலைகளில் இறங்கியிருந்தேன். நானும் கேமராவும் மறைவான இடங்களில் இருந்து கொண்டு என் அலைபேசி வாயிலாக உதவியாளர்களுக்கும் பரத்திற்கும் உத்தரவுகள் தந்தவண்ணம் இருந்தேன். காலை 7 மணியிலிருந்தே சம்மந்த சம்மந்தமில்லாத எண்களிலிருந்து என்னை அழைத்து நீங்க தான் நடிகர் விஷாலா?  இயக்குநர் லிங்குசாமியா?  என்றும் இடைவிடாத போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. என் படப்பிடிப்பு வேலையவே செய்ய முடியாத வண்ணம் இடைவிடாத அழைப்புகள். ஏண்டா என் நம்பர்ல எல்லாரும் கூப்பிடுறீங்க என்று டென்சனில் ஒரு அழைப்பாளரிடம் கத்தி விட்டேன். 

vasantha balan
ஒரு நாளிதழ் விளம்பரத்தில் உங்கள் நம்பர் போட்டுருக்கு சார் என்றார் ஒருவர். அந்த நாளிதழை வாங்கி பார்த்தால் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரைப் போட்டிருந்தார்கள். கடுப்பாகி போனை அணைத்து விட்டெறிந்தேன். அன்று படப்பிடிப்பு முடிந்து இரவு லிங்குசாமியிடம் ஏண்டா இப்படி போட்டீங்க? என்றேன். படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றோம் என்று பதிலுரைத்தான். மனதிற்குள் வெங்காய உத்தி என்று திட்டினேன். படம் மாபெரும் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருந்தான் எதற்கு இந்த நேரத்தில் என் சங்கடங்களை அவனிடம் பகிர வேண்டுமென அதைப் பற்றி பேசாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு அலைபேசியை அணைத்தேன். நீண்ட இரவு முழுக்க நீங்க விஷாலா லிங்குசாமியா என்று தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வந்த வண்ணம் இருந்தது. அந்த நம்பரை மாற்றிய பிறகு தான் தப்பித்தேன். நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே… டே நண்பா! குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Share this story