சினிமாவில் எப்போதும் காதல் கதைகள் தான் நன்றாக ஓடும்... நடிகர் ராமராஜன்
நடிகர் ராமராஜன் சினிமாவில் காதல் கதைகள் தான் நன்றாக ஓடும் என்றும், காதல் என்பது நமது மனதை விட்டு அகலாத ஒன்று என்றும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’ (2k love story). இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள ’2கே லவ் ஸ்டோரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாயகனை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன், “இந்த திரைப்படம் என்னை நானே மீட்டெடுக்க உதவிய திரைப்படம் என்று சொல்வேன். எனது வாழ்வில் நிறைய மேஜிக் நடந்தது. இப்படத்திலும் எனக்கு நிறைய நேர்மறை விஷயங்கள் நடந்தது. இயற்கை இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. இப்படத்தின் ஹீரோவிடம் முதலில் ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டேன்.
நான் முன்பு இயக்கிய நடிகர்களிடம் கூட அவ்வாறு நான் கேட்டதில்லை. கதை எழுதிவிட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இடம் கதை சொன்னேன். பிரேமலு மாதிரியான படமாக இது இருக்கும் என்றார். மேலும் வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும்” என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் ராமராஜன் பேசுகையில், “நான் இதுவரை எந்த ஊடக நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. ஆனால் சுசீந்திரனுக்காக இங்கு வந்துள்ளேன். இப்போது எல்லோரும் சொல்வது ’2கே கிட்ஸ்’ என்ற வார்த்தை தான். அன்றும், இன்றும், என்றும் காதல் கதைகள் தான் நன்றாக ஓடும். காதல் என்பது நமது மனதை விட்டு அகலாத ஒன்று. காதல் கதையை சரியாக சொன்னால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சுசீந்திரன் படத்தில் ஏதோவொன்று இருக்கும். எப்படி இருந்தாலும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்றால் சினிமா தான். திரைப்படத்துறை எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். அனைவருக்கும் படம் தயாரிக்கும் எண்ணம், தைரியம் வர வேண்டும். எந்த காலமாக இருந்தாலும் சினிமா மாறாது” என்று கூறினார்.